
ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்றது. இத்தொடர் தொடங்கிய சில நாள்களிலேயே இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இரண்டாம் அலை என மருத்துவர்கள் அனைவரும் விளக்கம் அளித்தனர். இது முதல் அலையை விட மிக மோசமாக இருக்கும் என்று அனைவரும் கூறியிருந்தனர். அவர்கள் கூறியவாறு தற்பொழுது இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுதான் போகிறது.
சராசரியாக ஒரு நாளைக்கு இந்தியாவில் 4 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறுபக்கம் பலி எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. சிகிச்சை பெற்று வரும் மக்கள் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் நடத்துவது சரிதானா என்று அனைவரும் கேள்வி கேட்ட நிலையில், அச்சத்திலும் பயத்திலும் மூழ்கி இருக்கும் மக்களுக்கு இது நம்பிக்கையும் பொழுதுபோக்கும் தேவை. அதற்காகவே இதை நாங்கள் பாதுகாப்பாக நடத்துகிறோம் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.