
ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 11ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியானது பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்திருந்தது. மேற்கொண்டு இந்த அணியின் காயத்தில் இருந்து மீண்டுள்ள கேமரூன் க்ரீன் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவருடன் சாம் கொன்ஸ்டாஸ், மார்னஸ் லபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், பியூ வெப்ஸ்டர் மற்றும் மேத்யூ குஹ்னெமன் உள்ளிட்டோரும் தங்களின் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.