
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. டெம்பா பவுமா தலைமையிலான இந்த தென் ஆப்பிரிக்க அணியில் டோனி டி ஸோர்ஸி, டிரிஸ்டன் ஸட்ப்ஸ், வியான் முல்டர் மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேற்கொண்டு டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சென், காகிசோ ரபாடா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னரே தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுத்திருந்த ஆன்ரிச் நோர்ட்ஜே தற்போது மீண்டும் காயம் காரணமாக எஸ்ஏ20 மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது. முந்ததாக கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி ஒருநால் உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த அவர், தற்போது தான் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் கம்பேக் கொடுத்தார்.