
எட்டாவது சீசன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றிலிருந்து எந்த 4 அணிகள் அறையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் நடப்பு தொடரில், 2 வெற்றி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளிகளுடன் உள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரைஇறுதிக்குள் நுழைந்து விடும். ஒரு வேளை தோற்றாலும் கடைசி லீக்கில் நெதர்லாந்தை தோற்கடித்தால் போதுமானது. முந்தைய ஆட்டத்தில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்ஆப்பிரிக்க அணி அதே வேட்கையுடன் பாகிஸ்தானையும் போட்டுத்தாக்க ஆயத்தமாக உள்ளது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி , 2 தோல்வி என்று 2 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறது. அந்த அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதன் பிறகு மற்ற போட்டிகளின் முடிவு சாதகமாக அமைய வேண்டும். அதாவது தென்ஆப்பிரிக்க அணி தனது கடைசி லீக்கில் தோற்க வேண்டும். இல்லாவிட்டால் இந்திய அணி, தனது கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயிடம் மோசமான தோல்வியை தழுவ வேண்டும்.