தியோதர் கோப்பை: கிழக்கு மண்டலத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது தெற்கு மண்டலம்!
கிழக்கு மண்டல அணிக்கெதிரான தியோதர் கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இந்தியாவின் பாரம்பரியமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியோதர் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான தெற்கு மண்டல அணியும், சௌரவ் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டல அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தெற்கு மண்டல அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தெற்கு மண்டல அணிக்கு குன்னுமால் - மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இதில் அபார் ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 63 ரன்களில் மயங்க் அகர்வால் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 13 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
Trending
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஹித் ராயுடுவும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குன்னுமால் சதமடித்து அசத்தினார். பின் 54 ரன்களில் ரோஹித்தும், 107 ரன்களில் குன்னுமாலும் விக்கெட்டை இழக்க பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் தெற்கு மண்டல அணி 8 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களைச் சேர்த்தது. கிழக்கு மண்டல அணி தரப்பில் ஷபாஸ் அஹ்மத், ரியான் பராக், உத்கர்ஷ் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கிழக்கு மண்டல அணியில் அபிமன்யூஸ் ஈஸ்வரன், உட்கர்ஷ் சிங், விராட் சிங் ஆகியோர் ஒற்றையிலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய சுதிப் குமார் 41, சௌரவ் திவாரி 28 ரன்களுக்கு ஆட்டமிழக்க 115 ரன்களுக்குள்ளே கிழக்கு மண்டல அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரியான் பராக் - குமார் குஷக்ரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசிய ரியான் பராக் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 95 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். முன்னதாக ரியான் பராக் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சதமடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து 68 ரன்களை எடுத்திருந்த குமார் குஷக்ராவும் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களாலும் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் கிழக்கு மண்டல அணி 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தெற்கு மண்டல அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், விஜயகுமார், வசுகி கௌசிக், வித்வாத் கவெரப்பா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
!
— BCCI Domestic (@BCCIdomestic) August 3, 2023
South Zone Captain @mayankcricket receives the prestigious #DeodharTrophy from Mr. Devajit Saikia, Joint Secretary, BCCI #SZvEZ | #Final pic.twitter.com/57beWkFTzM
இதன்மூலம் மயங்க் அகர்வால் தலைமையிலான தெற்கு மண்டல அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் கிழக்கு மண்டல அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சதமடித்த குன்னுமால் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவது பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ரியான் பராக் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Win Big, Make Your Cricket Tales Now