
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆயூஸ் பதோனி 55 ரன்களும், நிக்கோலஸ் பூரன் 48 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்க் சர்மா ஆகியோர் போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும், அபிஷேக் சர்மா 19 பந்துகளிலும் என தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். இருவரும் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்ததுடன், பரபட்சம் பார்க்காமல் பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசியதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது.
இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 89 ரன்களையும் சேர்த்தனர். மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த டிராவிஸ் ஹெட் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.