
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துமுடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகியுள்ளது. அதேசமயம் மீதமிருக்கும் மூன்று இடங்களை எந்தெந்த அணிகள் பிடிக்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அந்தவகையில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்சரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது.
இத்தொடரில் முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் 549 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தது. அதில் ஆர்சிபி அணி ஹைதராபாத் அணியிடம் தோல்வியைத்தழுவியது. மேலும் ஆர்சிபி அணி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை நாளைய போட்டியிலும் ஆர்சிபி அணி தோல்வியடையும் பட்சத்தில், நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும் முதல் அணி எனும் மோசமான நிலைக்கும் தள்ளப்படும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம் - ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
- நேரம் - இரவு 7.30 மணி