
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் ஹைபிரிட் முறையில் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி துவங்கும் இந்த போட்டியில் ஆறு அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றன. லீக் போட்டிகள் சூப்பர் ஃபோர் சுற்றி மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 13 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் வைத்து நடைபெற இருக்கிறது.
ஆசியக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இலங்கை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த அணியின் முக்கியமான வீரர் ஒருவர் திடீர் ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார். இது இலங்கை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 33 வயதான இலங்கை அணியின் லகிரு திரிமானே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்திருக்கிறார்.
இவரது ஓய்வு முடிவு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. இலங்கை அணிக்காக ஓபனிங் பேட்ஸ்மேன் ஆகவும் மிடில் ஆர்டரிலும் விளையாடிய இவர் 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்காற்றியவர். 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான இவர் 2022 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.