
சங்கக்கரா, ஜெயவர்தனே ஆகிய வீரர்களின் ஓய்விற்கு பிறகு, கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை அணி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அண்மையில் இங்கிலாந்துக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலுமே ஒயிட்வாஷ் ஆகி படுதோல்வியுடன் நாடு திரும்பியது.
இந்நிலையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை இலங்கைக்கு அனுப்பியது பிசிசிஐ. ஆனால், அந்த இந்திய அணியை 2ஆம் தர அணி என்று இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா மிகக்கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் ரணதுங்காவின் கருத்துக்கு பேச்சில் பதிலடி கொடுக்காமல், ஆட்டத்தில் பதிலடி கொடுத்து, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை வென்று பதிலடி கொடுத்தது. அதிலும் 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, தீபக் சாஹரை வீழ்த்த முடியாமல் தோல்வியடைந்தது இலங்கை அணி.