
ஜிம்பாப்வேவியில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்றின் 2ஆவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெலவாயோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து நெதர்லாந்து அணியை பந்துவீச அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா, சரித் அசலங்கா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த திமுத் கருணரத்னே - தனஞ்செய டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பின் கருணரத்னே 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய டி சில்வா 93 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க தடுமாற 47.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நெதர்லாந்து தரப்பில் வான் பீக், பாஸ் டி லீட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.