
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி அசத்தியது. இதைனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி மார்ச் 22ஆம் தேதி சில்ஹெட்டில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30ஆம் தேதி சட்டோகிராமில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் நடைபெற்றுவருவதால், இப்போட்டியின் முடிவுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி 68.51 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து அணி 50 சதவீத புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.