
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்திருந்தன. இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலவரங்கள் நடந்து வருகின்றன.
இவ்வாறான நிலையில், பாதுகாப்புக் கவலைகளையும் பொருட்படுத்தாமல் இலங்கை அணியனது இன்றைய தினம் இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்று வரும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலவரம் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி புறப்படுவதற்கு முன்னர் தங்களது பாதுகாப்பு நிலைமை குறித்து கவலையை தெரிவித்திருந்தது.
ஏனெனில் இங்கிலாந்து தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக இதுவரை ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கை அணியினர் தங்களது பாதுகாப்பு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்திருந்தது. தற்சமயம் இலங்கை அணியானது இன்றைய தினம் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், அணியின் முழு பாதுக்கப்பிற்கான பொறுப்பையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.