
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவிலுள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ - குசால் மெண்டீஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் மெண்டிஸுடன் இணைந்த சமரவிக்ரமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெண்டிஸ் 46 ரன்களுக்கும், சமரவிக்ரமா 41 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஜனித் லியாங்கேவும் 21 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய சரித் அசலங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய சஹான், தசுன் ஷனகா, மஹீஷ் தீக்ஷனா என அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.