
இலங்கை அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இலங்கை அணியானது 3-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இலங்கை அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் அறிமுக வீரர்கள் நிசலா தாரகா, மிலன் ரத்னயகே ஆகியோருடன், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெஃப்ரி வண்டர்சேவுக்கும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணியானது தற்சமயம் அங்கு நடைபெற்றுவரும் நாடு தழுவிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வெளியான தகவலின் படி, இலங்கை அணியைச் சேர்ந்த் ஏழு வீரர்கள் மற்றும் இரண்டு துணை ஊழியர்கள் தற்போது இங்கிலாந்தில் இருப்பதாகவும், மேலும் அவர்கள் பயிற்சிக்காக லண்டனுக்கு அருகிலுள்ள மைதானத்திற்குச் சென்று திரும்பும் போது இலங்கை கிரிக்கெட் (SLC) வாரியத்திடம் தங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் கோரியுள்ளனர்.