ஆசிய கோப்பை தொடரின் முக்கிய ஆட்டமாக வங்கதேசம், இலங்கை அணி மோதியது. இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
முக்கியமான ஆட்டத்தில் வங்கதேச அணியில் 3 மாற்றங்கள் செய்தது. அனாமுல் ஹக், முகமது நயிம் மற்றும் முகமது சயிஃபுதின் ஆகியோர் நீக்கப்பட்டு சபிர் ரஹ்மான், மெஹதி ஹசன் மற்றும் எபதாட் ஹூசைன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. சேஸிங் செய்யும் அணியே வெற்றி பெறும் என்பதால், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் சபிர் ரஹ்மான் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மெஹதி ஹசன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.26 பந்தகளை எதிர்கொண்ட மெஹதி ஹசன் 38 ரன்கள் விளாசினார், இதில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஷகிபுல் ஹசன் நிதானமாக விளையாடி 22 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.