
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் ஏற்கெனவே 8 அணிகள் தங்கள் இடத்த உறுதிசெய்த நிலையில், மீதமுள்ள இரு அணிகளின் தேர்வு தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளது. அந்தவகையில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் அபுதாபியில் நடைபெற்றது. இத்தொடரின் அரையிறுதிக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீகர், இலங்கை அணிகள் முன்னேறின.
நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லீயா பால் 45 ரன்களையும், அரின் கெல்லி 35 ரன்களையும் சேர்த்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் கேத்ரின் பிரைஸ் 4 விக்கெட்டுகளையும், ரேச்சல் ஸ்லேடர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து மகளிர் அணி சஸ்கியா ஹார்லே 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த மேகன் மெக்கல் - கேப்டன் கேத்ரின் பிரைஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்த மெக்கன் மெக்கல் 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்தாலும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேத்ரின் பிரைஸ் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தியதுடன், ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் முதல் முறையாக முன்னேறி அசத்தியுள்ளது.