
நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியதுடன், தொடரையும் வென்றது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்காக டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை மறுநாள் பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னரே நியூசிலாந்து அணியின் அடுத்த சுற்றுப்பயணத்திற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணி எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது.