
நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து கிட்டத்தட்ட 750 ரன்களையும், 100-க்கும் மேற்பட்ட பவுண்டரிகளையும் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இருந்தாலும் இந்த போட்டியில் இலங்கை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி இப்போட்டியில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
தென் ஆப்பிரிக்க அணி சார்பாக டி காக் மார்க்ரம், வாண்டர் டுசைன் ஆகிய மூவரும் சதம் அடித்து அசத்தினர். அதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்களை மட்டுமே குவித்ததால் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவிடம் படுமோசமான தோல்வியை சந்தித்திருந்த இலங்கை தற்போது உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் இந்த தோல்வி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.