
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய விண்டிஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கவேம் ஹாட்ஜ் - ஜோசுவா டா சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 71 ரன்களுக்கு கவேம் ஹாட்ஜும், 79 ரன்களுக்கு ஜோசுவா டா சில்வாவும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களைச் சேர்த்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெவின் சின்க்ளேர் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.