-mdl.jpg)
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது எதிரணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - வெங்கடேஷ் ஐயர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 39 ரன்களுக்கு ஆட்ட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் அரைசதம் அடித்து அசத்திய வெங்கடேஷ் ஐயர் 51 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. மேலும் இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதினை வென்றார். அதன்பின் போட்டி முடிந்து பேசிய ஸ்டார்க், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இது மிகவும் சிறப்பான ஒரு இரவு. இந்த போட்டி மட்டும் இல்லாமல், இந்த தொடர் முழுவதிலும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளோம். எங்கள் அணியில் மிக சிறந்த பந்துவீச்சாளர்கள் பலர் இருப்பதால், பந்துவீச்சே எங்களது பெரிய பலமாக இருந்தது.