
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்த்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து தங்களது 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தனர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட திமுத் கருணரத்னே 36 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, தினேஷ் சண்டிமால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 13 ரன்னிலும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களிலும் அடுத்து வந்த ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா மற்றும் நிஷான் பெய்ரிஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை குசால் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் தொடர்ந்தனர். இதில் குசால் மெண்டிஸ் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.