
அமெரிக்காவில் நடைபெற்று வந்த மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் நிறைவடைந்தது. இத்தொடரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வாஷிங்டன் ஃப்ரீடம் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரது அதிரடியில் 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்களை குவித்தது.
இதில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 88 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 40 ரன்களையும் சேர்த்தனர். யூனிகார்ன்ஸ் அணி தரப்பில் பட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி அணியில் கார்மி லி ரூக்ஸ் 20 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியானது 16 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வாஷிங்டன் அணி தரப்பில் மார்கோ ஜான்சென், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை வீழ்த்தியது எம்எல்சி தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.