
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ன் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தியதுடன் சில சாதனைகளையும் தனது பெயரில் பதிவுசெய்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷாக்னே, கேமரூன் க்ரீன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - பியூ வெப்ஸ்டர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களுக்கும், பியூ வெப்ஸ்டர் 72 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.