
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 85 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 74 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், லையன், குஹ்னெமன் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் சதமடித்து அசத்தினர், இதில் ஸ்மித் 131 ரன்களையும், அலெக்ஸ் கேரி 156 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 414 ரன்களைக் குவித்தது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய காரணத்தால் அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 76 ரன்களையும், குசால் மெண்டிஸ் 50 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் லையன், குஹ்னெமன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.