
கடந்த 2017 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக அப்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பதவி பறிக்கப்பட்டு டிம் பெயினிடம் வழங்கப்பட்டது. அப்போது இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக டிம் பெயின் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சக பெண் ஊழியருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக டிம் பெயின் மீது பாலியல் புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக டிம் பெயின் அறிவித்தார்.
பெண் கிரிக்கெட் ஊழியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது அம்பலமானதால் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் பெய்ன் விலகியது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய சேர்மன் ரிச்சர்ட் பிரெடென்ஸ்டீன் நேற்று கூறும் போது, ‘இந்த விவகாரம் குறித்து 2018ஆம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்ட போது டிம் பெய்னின் செயலை ஏற்றுக்கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்காமல் விட்டது தவறான முன்னுதாரணமாகும். அப்போதே அவரது கேப்டன் பதவியை பறித்திருக்க வேண்டும். ஆஸ்திரேலிய கேப்டன் என்பவர் மிக உயரிய தரத்துடன் இருக்க வேண்டும்’ என்றார்.