
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் ஏதோவொரு விவகாரத்தில் ரசிகர்கள் மோதிக் கொள்கின்றனர். அல்லது களத்தில் ரசிகர்கள் செய்யும் சேட்டை சர்ச்சையாகி வருகிறது. ஏற்கனவே பேர்ஸ்டோவ் ரன் அவுட் சர்ச்சை, அலெக்ஸ் கேரி பியூட்டி பார்லர் சர்ச்சை உள்ளிட்டவை விவாதமாகியது.
பின்னர் 4ஆவது போட்டி மட்டும் மழையால் டிராவானதால் எந்த சர்ச்சையும் இல்லாமல் முடிவடைந்தது. இந்நிலையில் லண்டன் ஓவலில் நடந்து வரும் 5ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இன்றைய நாளில் இங்கிலாந்து பவுலர்களின் ஆக்ரோஷத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். லபுஷாக்னே 9 ரன்களிலும், கவாஜா 47 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்து அதிரடியாக விளையாடிய மார்ஷ் 16 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி ல்185 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.