
இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து இனிமேல், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரஹானே, புஜாரா, இஷாந்த் சர்மா, சஹா ஆகிய சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சரியாக ஆடாமல் சொதப்பிவருகின்றனர். மிடில் ஆர்டரில் அவர்களது மோசமான பேட்டிங், இந்திய அணியை கடுமையாக பாதிக்கிறது. போட்டியின் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.
அதேபோல இஷாந்த் சர்மா, ரிதிமான் சஹா ஆகிய சீனியர் வீரர்களும் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். ரோஹித் சர்மா தலைமையில் எதிர்காலத்திற்கான வலுவான இந்திய அணி கட்டமைக்கப்படுகிறது. அதனால் சீனியர் வீரர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். சீனியர் வீரர்களை காரணமில்லாமல் ஓரங்கட்டவில்லை. இஷாந்த், சஹாவிற்கு அணியில் இடம் இல்லை. ஆனால் ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் சரியாக ஆடாததால் அவர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர்.