
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று பார்ல் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சஞ்சு சாம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியதோடு தன் முதல் சர்வதேச சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். இந்தப் போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் விளையாட வந்தார் சஞ்சு சாம்சன்.
அப்போது தொடக்க வீரர்கள் ஆட்டமிழந்ததோடு பேட்டிங் வரிசையில் இடம் பெற்று இருந்த ஒரே ஒரு அனுபவ பேட்ஸ்மேன் கே எல் ராகுலும் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த நிலையில் திலக் வர்மாவுடன் இணைந்து நிதான ஆட்டம் ஆடி பின் கடைசி 15 ஓவர்களின் போது வேகம் எடுத்தார் சஞ்சு சாம்சன். 114 பந்துகளில் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது சதம் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 296 ரன்கள் குவித்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தன. இதனால் அந்த அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டோனி டி ஸோர்ஸி 81 ரன்களைச் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.