
ஐபிஎல் தொடரில் நேற்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் மோதிக்கொண்ட போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக இருந்த இந்தப் போட்டியில் சென்னை அணி இறுதியில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு கான்வே 83, ஷிவம் துபே 52 ரன்கள் எடுக்க சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 226 ரன்களை ஆறு விக்கட்டுகள் இழப்புக்கு குவித்தது.
இதற்கு அடுத்து சாதனை ஐபிஎல் இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு கேப்டன் ஃபாஃப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இருவரும் முறையே 62, 76 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறும் தொலைவில் கொண்டு வந்து வைத்தார்கள். கடைசி ஆறு ஓவர்களுக்கு 68 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பின் வரிசையில் வந்த ஷாபாஷ் அகமத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பெங்களூர் அணி நேற்று தோல்வி அடைந்ததோடு ஒரு சாதனை வெற்றியையும் பெற தவறிவிட்டது.
இந்தப் போட்டியில் சென்னை அணி வீரர்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தார்கள். மொயின் அலி அசட்டையாக ஃபீல்டிங்கில் இருந்து எளிமையான ஒரு ரன் அவுட் வாய்ப்பை வீணடித்தார். நிறைய தவறுகள் நடைபெற்ற இருந்தாலும் சென்னை அணி வெற்றி பெற்றது.