
ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் இந்திய அணி தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் பரபரப்பான போட்டிகளுக்கு பின் 2 – 2 என்ற கணக்கில் சமனில் நிறைவு பெற்றது. இந்த தொடரில் நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தான் பேட்டிங்கில் தூண்களாக செயல்பட்டார்கள்.
அதிலும் 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாடிய தமிழகத்தின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்ற 4 போட்டிகளில் 92 ரன்களை 158.62 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார்.
ராஜ்கோட்டில் நடந்த 4ஆவது போட்டியில் 81/4 என இந்தியா தடுமாறிய போது 55 ரன்களை தெறிக்கவிட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற எம்எஸ் தோனியின் சாதனை உடைத்து புதிய சாதனையுடன் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.