IND vs ENG: ஷுப்மன் கில்லின் பேட்டிங் குறித்து விமர்சித்த சுனில் கவாஸ்கர்!
இந்த இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லின் ஷாட் தேர்வு சிறப்பாக இல்லை. அவர், என்ன நினைப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என என்னால் கணிக்க முடியவில்லை என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைத்ராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெஸ்வா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அரைசதங்கள் மூலமாக 436 ரன்களைக் குவித்து, முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதில் அதிக பட்சமாக் ரவீந்திர ஜடேஜா 87 ரன்களையும், கேஎல் ராகுல் 86 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களையும் சேர்த்தனர்.
Trending
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி தற்போது வரை 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் இந்திய அணி பேட்டிங்கின் போது ஷுப்மன் கில் ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதில் அவர் 66 பந்துகளை எதிர்கொண்டு நன்கு செட்டில் ஆன நிலையில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி 22 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இதனால் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், "இந்த இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லின் ஷாட் தேர்வு சிறப்பாக இல்லை. அவர், என்ன நினைப்பில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என என்னால் கணிக்க முடியவில்லை. தனக்கான இடத்தில் கில் களமிறங்கி செட்டிலாகிக் கொண்டிருந்தார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் எதற்கு அப்படியான ஷாட்டை அவர் விளையாடினார் என தெரியவில்லை.
அந்த பந்தை அவர் அடிக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு பீல்டர்களுக்கு இடையே அடித்திருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடி ஒரு மோசமான ஷாட்டில் ஆட்டமிழந்ததை நான் எதிர்பார்க்கவில்லை" என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஷுப்மன் கில் கடந்த சில மாதங்களாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now