Advertisement
Advertisement
Advertisement

எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறை எஸ்ஏ20 தொடரில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 11, 2024 • 10:41 AM
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ (Image Source: Google)
Advertisement

டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறை எஸ்ஏ20 தொடரில் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸை வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

Trending


இதையடுத்து அந்த அணிக்கு தொடக்கம் கொடுக்க ஜோர்டன் ஹார்மேன் - டேவிட் மாலன் இணை களத்திற்கு வந்தது. இதில் டேவிட் மாலன் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரீஸ் டாப்லி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து ஹார்மேனுடன் இணைந்த டாம் அபேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார். 

இப்போட்டியில் இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோர் உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 90 ரன்களை எட்டியது. அதன்பின் அரைசதத்தை நெருங்கி ஜோர்டன் ஹார்மேன் 42 ரன்களில் விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் அரைசதம் கடந்திருந்த டாம் அபேலும் 55 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜின் அதே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணை அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இவர்களை பிரிக்கமுடியாமல் எதிரணி பந்துவீச்சாளர்களும் தடுமாற, அதிரடியாக விளையாடி வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 56 ரன்களையும், கேப்டன் ஐடன் மார்க்ரம் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்களையும் சேர்த்ததுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அடித்து அசத்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்களைக் குவித்தது.

அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் 3 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய ஜேஜே ஸ்மட்ஸ், பனுகா ராஜபக்‌ஷா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய வியான் முல்டர் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேத்யூ பிரீட்ஸ்கி 18 ரன்களிலும், அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து அணியின் வெற்றி வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் வந்த வீரர்களும் ரன்களை சேர்க்க தடுமாற 17ஓவர்களிலேயே டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மார்கோ ஜான்சென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது முறை எஸ்ஏ20 லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட டாம் அபேல் ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement