
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கேப்டவுன் அணியின் தொடக்க வீரர் டெவால்ட் பிரீவிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரிக்லெடன் - ரோலோஃப்சென் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
பின் 46 ரன்களில் ரிக்லெடன் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, மறுமுனையிலிருந்த ரோலோஃப்சன் அரைசதம் கடந்த கையோடு 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஓடியன் ஸ்மித் தனது பங்கிற்கு 13 பந்துகளில் 25 ரன்களை விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கேப்டவுன் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.