ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ஷாபாஸ், அபிஷேக் சுழலில் வீழ்ந்தது ராஜஸ்தான்; இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியுள்ள நிலையில், இரண்டாவதாக எந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பவுண்டரி சிக்ஸருடன் தொடங்கிய அபிஷேக் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
Trending
தொடர்ந்து சிரப்பாக விளையாடிய ராகுல் திரிபாதி 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 68 ரன்களைச் சேர்த்தனர். பின்னர் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய டிராவிஸ் ஹெட் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதீஷ் ரெட்டி 5 ரன்களிலும், அப்துல் ஷமத் ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் இப்போட்டியில் 5ஆம் இடத்தில் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 33 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அதன்பின் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்களை எடுத்திருந்த ஹென்ரிச் கிளாசென், சந்தீப் சர்மாவின் அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்த ஷபாஸ் அஹ்மதும் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிரென்ட் போல்ட், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கொஹ்லர் காட்மோர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் காட்மோர் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்.
அதன்பின் தொடர்ந்து தடுமாறி வந்த கொஹ்லர் காட்மோர் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசினார். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கபட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 10 ரன்களிலும், ரியான் பராக் 6 ரன்களிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும், ஷிம்ரான் ஹெட்மையர் 6 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அதிரடியாக விளையாடிய துருவ் ஜூரெல் ஒருமுனையில் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச, மறுபக்கம் அதிரடியாக விளையாட வேண்டிய நிலையில் ரோவ்மன் பாவெல் 6 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். ஆனாலும் தனது முயற்சியை கைவிடாத துருவ் ஜுரெல் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களைச் சேர்த்தபோதும் ராஜஸ்தான் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷபாஸ் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now