ஒரு நொடியில் அனைத்துமே மாறியது - ஐடன் மார்க்ரம்!
இது போன்ற போட்டிகளில் ஏற்படும் அழுத்தங்களை சமாளித்து விளையாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கை அளித்திருக்கிறது என ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் கூறியுள்ளார்.
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியானது ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்கள் குவித்து அசத்தியது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 95 ரன்கள், சஞ்சு சாம்சன் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.
Trending
பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. அதிலும் குறிப்பாக கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளென் பிலிப்ஸ் மற்றும் அப்துல் சமாத் ஆகியோரது அதிரடி காரணமாக சன் ரைசர்ஸ் அணி அசத்தலான வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம், “ஒரு நொடியில் அனைத்துமே மாறியது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி. 215 ரன்கள் என்கிற இலக்கினை துரத்துவது எளிது கிடையாது. இதுபோன்ற மிகப்பெரிய டார்கெட்டை துரத்தும் போது அனைவரது பங்களிப்பும் அவசியம். அந்த வகையில் இன்று எங்களது பேட்ஸ்மேன்கள் அனைவருமே மிகச்சிறப்பான பங்களிப்பினை வழங்கினார்.
குறிப்பாக அபிஷேக் சர்மா துவக்கத்தில் அதிரடியாக விளையாடினார். அதேபோன்று ராகுல் திரிப்பாதி அவருக்கு சரியான கம்பெனி கொடுக்க இறுதி நேரத்தில் கிளென் பிலிப்ஸ் மற்றும் கிளாசன் ஆகியோர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அப்துல் சமத் எங்களுக்காக போட்டியை மிகச்சிறப்பாக முடித்துக் கொடுத்தார். இது போன்ற போட்டிகளில் ஏற்படும் அழுத்தங்களை சமாளித்து விளையாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கை அளித்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now