மகளிர் டி20 சேலஞ்ச்: வொல்வார்ட் போராட்டம் வீண்; மூன்றாவது முறையா கோப்பையை வென்றது சூப்பர்நோவாஸ்!
மகளிர் ஐபிஎல் 2022: வெலாசிட்டி அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் மற்றும் வெலாசிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெலாசிட்டி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர்நோவாஸ் அணியின் தொடக்க வீராங்கனை டோட்டின் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான பிரியா புனியா 28 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக ஆடி 43 ரன்கள் அடித்தார்.
Trending
பூஜா வஸ்த்ராகர், சுனே லூஸ், ஹர்லீன் டியோல் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். அரைசதம் அடித்த டாட்டின் 44 பந்தில் 62 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 165 ரன்கள் அடித்த சூப்பர்நோவாஸ் அணி, 166 ரன்கள் என்ற சவாலான இலக்கை வெலாசிட்டி அணிக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்தி களமிறங்கிய வெலாசிட்டி அணிக்கு ஷஃபாலி வர்மா - யஸ்த்கா பாட்டியா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
அதன்பின் 15 ரன்கள் எடுத்திருந்த ஷஃபாலி வர்மா, டோட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீராங்கனை கிரண் நவ்கிரே 13 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதையடுத்து 13 ரன்கள் எடுத்திருந்த யஸ்திகா பாட்டி விக்கெட்டை இழக்க, அடுத்துவந்த சாந்தம் 6 ரன்களிலும், கேப்டன் தீப்தி சர்மா 2, ஸ்நே ராணா 15, ராதா யாதவ் 0, கேட் கிராஸ் 13 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த லாரா வொல்வார்ட் அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையளித்தார். அவருடன் இணைந்த சிம்ரனும் பவுண்டரிகளைப் பறக்கவிட எதிரணி பந்துவீச்சாளர்கள் திகைத்து நின்றனர்.
அதிலும் பூஜா வஸ்திரேக்கர் வீசிய 19ஆவது ஓவரில் சிம்ரன் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் வெலாசிட்டி அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
அதன்பின் எக்லஸ்டோன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை லாரா வொல்வார்ட் சிக்சருக்கு விளாசி ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினார். இறுதியில் கடைசி பந்தில் வெலாசிட்டி அணி வெற்றிபெற 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதனை எதிர்கொண்ட சிம்ரன் பவுண்டரி விளாச தவறினார்.
இதனால் வெலாசிட்டி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சூப்பர்நோவாஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன், மூன்றாவது முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் கோப்பையை வென்று அசத்தியது.
Win Big, Make Your Cricket Tales Now