
இந்தியாவில் நடைபெறும் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் நிர்வகிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ அரசு சாராத தனிமையான அமைப்பாகும். மேலும் அதன் தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி கடந்து 2019இல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதே போல் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயலாளர் பதவியில் தற்போதைய இந்திய அரசில் முக்கிய அமைச்சராக இருக்கும் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நியமிக்கப்பட்டார்.
இதில் கடந்த 2000ஆம் ஆண்டில் கேப்டனாக பொறுப்பேற்ற போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்த இந்தியாவை தனது அதிரடியான கேப்டன்ஷிப் வாயிலாக அடுத்த சில வருடங்களிலேயே வெற்றிநடை போட வைத்து ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கங்குலி தலைவராக நியமிக்கப்பட்டது நிறைய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
ஏனெனில் இந்திய கிரிக்கெட்டை வளப்படுத்திய அவர் வாரியத்தையும் சிறந்த முறையில் நிர்வகிப்பார் என்று அனைத்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நம்பினர். அதற்கு ஏற்றார்போல் பொறுப்பேற்றதும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பளத்தை உயர்வதற்கான முதல் கையெழுத்து போட்ட கங்குலி அதுவரை யோசித்து வந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியா விளையாடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.