
தமிழக அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் விளையாடிய இவர் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக அறிமுகமாகி ரசிகர்களால் அறியப்பட்டவர். 2022-23 ஆண்டிற்கான விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எட்டு போட்டிகளில் விளையாடி 610 ரன்கள் குவித்தார். மேலும் அந்தப் போட்டி தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றார் . இதில் மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும்.
இதனைத் தொடர்ந்து தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். பின் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 96 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 507 ரன்கள் குவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இவர் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் எடுத்தார்.
இந்த வருடம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவருக்கு தற்போது மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்று கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டின் நடப்புச் சாம்பியன் சர்ரே அணிக்கு விளையாடுவதற்காக சாய் சுதர்சனக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 21 வயதிலேயே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.