
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது மூன்று போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. நேற்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது தொடரில் நீடிக்கிறது.
இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆன திலக் வர்மா மிகச் சிறப்பான அனுபவம் கொண்டவர்கள் போலான முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். முதல் டி20 போட்டியில் 39 ரன்கள் எடுத்து அரை சதத்தை தவறவிட்ட அவர், இரண்டாவது போட்டியில் 51 ரன்கள் எடுத்து தனது முதல் சர்வதேச அரை சதத்தை பதிவு செய்தார். இந்த நிலையில் நேற்று அவர் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
நேற்று வென்றே ஆக வேண்டிய மிக முக்கியமான போட்டியில் சக மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரரான இந்திய அணியின் நட்சத்திர டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் உடன் சேர்ந்து மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவி செய்தார். இவர் தந்த ஒத்துழைப்பு சூரியகுமார் யாதவை அழுத்தம் இல்லாமல் அவரது ஆட்டத்தை விளையாட அனுமதித்தது. இறுதியில் ஆட்டத்தை சூரியகுமார் மாற்றி இந்தியாவின் கைகளில் தந்து ஆட்டம் இழந்தார். அவரே ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.