எனது ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது - சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டது குறித்து சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி கைல் மேயர்ஸின் அரைசதம் மற்றும் ஷிம்ரான் ஹெட்மையரின் கேமியோவின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
Trending
இதைத் தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா 11 ரன்களை அதிரடியாக எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட முதுகு பிடிப்பு காரணமாக பெவிலியன் திரும்பியது ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டு அதிரடியாக ரன்களை சேர்த்தார்.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் மறுபுறம் 8 பவுண்டரி 4 சிக்சர்களை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து 76 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் 19 ஓவரிலேயே இந்திய அணி இலக்கை எட்டி,7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த போட்டியில் வெறும் 138 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்த இந்தியாவுக்கு இம்முறை 165 ரன்களை துரத்தும்போது கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இருப்பினும் அவர் இல்லாத சமயத்தில் பொறுப்புடன் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இது பற்றி போட்டி முடிந்த பின் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது இன்னிங்ஸ் சென்ற விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக ரோஹித் சர்மா போன்ற முக்கியமான வீரர் ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பியதும் 15 – 17 ஓவர்கள் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியமானதாகும்.
அதை நேற்றைய 2ஆவது போட்டியின் 2ஆவது இன்னிங்சில் எங்களின் பேட்டிங்கில் பார்த்தோம். எனவே இப்போட்டியை கடைசி வரை ஒருவர் எடுத்துச்சென்று வெற்றி பெற்று கொடுப்பது மிகவும் முக்கியமாகும், அதில் தான் நானும் கவனம் செலுத்தினேன். அந்த தருணங்களில் எனக்கு நானே நம்பிக்கையை கொடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்தேன்” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now