ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீரராக சூர்யகுமார் யாதவ் தேர்வு!
2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரருக்கான ஐசிசி விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்திருந்தது.
அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தின் இளம் வீரர் மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியை சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
Trending
சூர்யகுமார் யாதவ் கடந்த 2023ஆம் ஆண்டு 17 இன்னிங்ஸ்களில் விளையாடி 48.86 என்ற சராசரியுடன் 733 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இந்திய டி20 அணிக்காக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 போட்டிகளில் விளையாடி 4 சதம் மற்றும் 17 அரைசதங்களுடன் 2,141 ரன்களையும் விளாசியுள்ளார். அதிலும் அவர் கடைசியாக தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் சதமடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டி20 வீரர் விருதை வென்ற சூர்யகுமார் யாதாவ், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஐசிசி ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now