
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களையும், கேமரூன் கிரீன் 52 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக அக்சர் பட்டேல் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதன் பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடி இந்திய அணியானது துவக்கத்திலேயே ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தது. அதன் பின்னர் எப்படி இந்த சரிவிலிருந்து மீளப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மூன்றாவது விக்கெட் 104 ரன்கள் சேர்த்து சூரியகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஜோடியானது அசத்தியது.