
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டியில் இந்திய அணியும், நெதர்லாந்து அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 62* ரன்களும், ரோஹித் சர்மா 53 ரன்களும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 51 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நெதர்லாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் டிம் ப்ரிங்கில் 20 ரன்களும், காலின் அக்ரமன் 17 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்றவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி அடுத்தடுத்து விக்கெட்டையும் இழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்த நெதர்லாந்து அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.