
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 164/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கெய்ல் மேயர்ஸ் 73 (50) ரன்கள் குவிக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து இலக்கை துரத்திய தொடர்ந்து 165 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு பொறுப்புடன் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 15 ஓவர்கள் வரை அபாரமாக பேட்டிங் செய்து 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 76 ரன்களைச் சேர்த்ததன் மூலம் 19 ஓவரில் 165/3 ரன்கள் எடுத்த இந்தியா 2 – 1 என்ற கணக்கில் மீண்டும் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா போன்ற வீரர்கள் ஓபனிங் இடத்தில் களமிறங்க தயாராக இருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படக்கூடிய சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் முதல் 2 போட்டிகளில் அவர் தடுமாறியதால் அந்த முடிவை எடுத்த ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள்.
இந்நிலைமையில் இப்போட்டியில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் அனைத்து இடத்திலும் தம்மால் விளையாட முடியும் என்று நிரூபித்து டிராவிட் மற்றும் ரோஹித் மீதான விமர்சனங்களையும் உடைத்தார். அதிலும் பேக்லிப்ட் பந்தை அசால்டாக சிக்சர் அடித்த அவர் பந்திற்கு கீழே வந்து கீப்பருக்கு மேலே பவுண்டரியை பறக்க விட்டதை பார்த்த ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள்.