ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை மொத்தமாகவே தடை செய்ய வேண்டும் - ஸ்காட் ஸ்டைரிஸ்!
ஸ்விட்ச் ஹிட் ஷாட்டை மொத்தமாகவே தடை செய்ய வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன என்பது பவுலர்களின் ஆதங்கம். அந்தவகையில், அப்படியான ஒரு விதியை பவுலர்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் வலியுறுத்தியுள்ளார்.
பவுலர்கள் எந்த பக்கத்தில் இருந்து பந்துவீசப்போகிறார்கள், எந்த கையில் பந்துவீசப்போகிறார்கள் என்பதெல்லாம் முன்பே தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. பேட்ஸ்மேன் எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் ஆடலாம். நினைத்தபோதெல்லாம் எந்த பக்கம் திரும்பியும் பேட்டிங் ஆடலாம்.
Trending
இந்த காலக்கட்டத்தில் நிறைய பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட் (வலது கை பேட்ஸ்மேன் முழுவதுமாக இடது பக்கம் திரும்பி ஆடுவது அல்லது இடது கை பேட்ஸ்மேன் வலது பக்கம் திரும்பி ஆடுவது) ஷாட் எல்லாம் ஆடுகின்றனர். பேட்ஸ்மேன்கள் எந்த பக்கம் வேண்டுமானால் திரும்பி அவர்களின் தேவைக்கேற்ப ஆட முடிகிறது.
ஆனால் அப்படி ஆடும்போது எல்பிடபிள்யூ ஆனால் கூட, பந்து லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆயிற்று, என்று கூறி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டிலிருந்து தப்பிவிடுகின்றனர். அது பேட்ஸ்மேன் பிரச்னை இல்லை; விதி அப்படி இருக்கிறது. அதனால் பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட் ஆடமுயன்று அவுட்டானால் கூட தப்பித்துவிடுகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து அதிருப்தி தெரிவித்திருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், விதி மாற்றம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்து கருத்து கூறிய அஷ்வின், “பேட்ஸ்மேன்கள் திரும்பி ஸ்விட்ச் ஹிட் ஆடும்போது எல்பிடபிள்யூ ஆனால், லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆகிறது என்ற காரணமெல்லாம் இல்லாமல் பந்து ஸ்டம்ப்பை தாக்கினாலே எல்பிடபிள்யூ கொடுக்கும் வகையில் விதியை மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
அஸ்வின் கருத்துக்கு நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ஸ்காட் ஸ்டைரிஸும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஸ்காட் ஸ்டைரிஸ், “அஸ்வினின் பல கருத்துகள் என ரொம்ப பிடிக்கும். ஸ்விட்ச் ஹிட் ஷாட் ஆடும்போது எல்பிடபிள்யூ விக்கெட் முறையில் விதி மாற்றத்தை அஸ்வின் பரிந்துரைத்தார். என்னை கேட்டால், ஸ்விட்ச் ஹிட் ஷாட்டையே தடை செய்ய வேண்டும் என்பேன்.
ஃபீல்டிங் அணி கேப்டனுக்கும் பவுலர்களுக்கும் ஃபீல்டிங் செட்டப் விதிகளில் கட்டுப்பாடுகள் உள்ளன. அப்படியிருக்கையில், பேட்ஸ்மேன் மொத்தமாக கைகளை மாற்றி திரும்பி நின்று ஸ்விட்ச் ஹிட் ஆடுவது சரியாக இருக்காது. எனவே அந்த ஷாட்டையே தடை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now