
தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர வீரர் நடராஜன் அடிமட்டத்திலிருந்து கடுமையாக உழைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடி சாதனை படைத்தவராக போற்றப்படுகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நெட் பவுலராக நடராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
அந்த தொடரில் பும்ரா காயமடைந்ததால் முதலில் டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்று 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அவர் அதன் காரணமாக அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு பெற்று 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைவிட அடுத்ததாக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரில் காபா போட்டியில் அறிமுகமாகி 3 விக்கெட்டுகளை எடுத்து மறக்க முடியாத வெற்றியில் பங்காற்றினார்.
அதன் பின் காயமடைந்ததால் மீண்டும் இடம் கிடைக்காமல் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன்கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை இளைஞர்கள் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக தம்முடைய சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் அகடமியை உருவாக்கினார். சேலத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த அகாடமி வேலைகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது.