
டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் 2 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காளதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
இதுவரை இந்தியா 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து ஆகியவற்றின் மூலம் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
இரண்டு அணிகளும் தங்களது 3ஆவது போட்டியில் நாளை பெர்த்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சற்று கூடுதலாக ஒத்துழைக்கும். அதிலும் பெர்த் ஆடுகளம் உலகின் அதிவேக வேகப்பந்து ஆடுகளம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.