Advertisement

டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் வெற்றியை களவாடிய ஐடன் மார்க்ராம், டேவிட் மில்லர்!

டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் போராடி தோல்வியடைந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 30, 2022 • 20:07 PM
T20 World Cup 2022: Aiden Markram, David Miller steals India's victory in T20 World cup Super 12 sta
T20 World Cup 2022: Aiden Markram, David Miller steals India's victory in T20 World cup Super 12 sta (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2இல் மிகச்சிறப்பாக ஆடிவரும் மற்றும் சமபலம் வாய்ந்த அணிகளான இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று ஆடிவருகின்றன. பெர்த்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டது. இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணியில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டார்.

Trending


முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் ஒரே ஓவரில்(5வது ஓவரில்) வீழ்த்திய லுங்கி இங்கிடி, தனது அடுத்தடுத்த ஓவர்களில் கோலியௌ 12 ரன்களிலும் மற்றும் ஹர்திக் பாண்டியாவை இரண்டு ரன்கன் என  இருவரையும் வீழ்த்தினார். தீபக் ஹூடாவை 2 ரன்னில் நோர்ட்ஜே வீழ்த்த, இந்திய அணி 49 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் அடித்து ஆட, மந்தமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 15 பந்தில் 6 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் சூர்யகுமாருடன் 7 ஓவர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் தினேஷ் கார்த்திக். அடித்து ஆடி 30 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 40 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்து 19வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

சூர்யகுமாரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 133 ரன்கள் அடித்து, 134 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் - கேப்டன் டெம்பா பவுமா இணை, புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரை பார்த்து விளையாடினர். அதன்பின் இரண்டாவது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் முதல் பந்தில் குயின்டன் டி காக் விக்கெட்டையும், 3ஆவது பந்தில் ரைலீ ரூஸோவின் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தின் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். 

அதன்பின் வழக்கம்போல் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிவந்த கேப்டன் டெம்பா பவுமா 10 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமியின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியும் 24 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் - டேவிட் மில்ல்லர் இணை ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஆட்டத்தின் 10ஆவது ஓவருக்கு பின் தங்களது ருத்ரதாண்டவத்தை தொடங்கிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர்களை விளாசி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

அதற்கேற்றது போல் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் எளிமையான கேட்சுகளை தவறவிட, மறுபக்கம் கேப்டன் ரோஹித் சர்மாவும் தனது பங்கிற்கு ரன் அவுட் வாய்ப்புகளை தவறவிட்டு, தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

இதற்கிடையில் ஐடன் மார்க்ரம் அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய டேவிட் மில்லர், அஸ்வின் வீசிய 18ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

ஒருபக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்டிரிஸ்டன் ஸ்டப்ஸின் விக்கெட்டை வீழ்த்தினாலும், மறுபக்கம் டேவிட் மில்லர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதனால் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இதில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் மில்ல்லர் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 5 புள்ளிகளைப் பெற்று, ஏறத்தாழ அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.  


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement