
டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குரூப் 1இல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கு இடையே அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது. குரூப் 2இல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றாலும், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கும் இன்னும் பின்புற வாய்ப்புள்ளது.
எனவே கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்துக்கு எதிராக ஆடிவருகிறது. வங்கதேசத்துக்கும் வெற்றி முக்கியம். அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடா நீக்கப்பட்டு மீண்டும் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். முதல் 3 போட்டிகளிலும் சரியாக ஆடாத கேஎல் ராகுல் மீது பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இந்த போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். தனது டிரேட்மார்க் ஷாட்களை ஆடிய ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்து, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.