டி20 உலகக்கோப்பை: காம்பெர் அதிரடியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன.
முதல் சுற்று ஆட்டத்தில் இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்ஸி மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்.
Trending
இதில் முன்ஸி 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் களம் புகுந்தார். ஜோன்ஸ் மற்றும் கிராஸ் இணை சிறுது நேரம் தாக்குப்படித்து ஆடினர். இதில் கிராஸ் 28 ரன்னில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஜோன்ஸ்வுடன் கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றியது.
அதிரடியாக ஆடிய ஜோன்ஸ் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய கேப்டன் ரிச்சி பெர்ரிங்க்டன் 37 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து மைக்கேல் லீஸ்க் களம் இறங்கினார். இந்நிலையில் ஜோன்ஸ் 86 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மைக்கெல் ஜோன்ஸ் 86 ரன் எடுத்தார். அயர்லாந்து அணி தரப்பில் கர்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டும், மார்க் அடாய்ர், ஜோசுவா லிட்டில் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்டி பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த லோர்கன் டக்கர் -ஹாரி டெக்டர் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் டக்கர் 20 ரன்களிலு, டெக்டர் 14 ரன்களிலும் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கர்டிஸ் காம்பெர் - ஜார்ஜ் டக்ரெல் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கர்டிஸ் காம்பர் 25 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய ஜார்ஜ் டக்ரெலும் பவுண்டரிகளை விளாச, இருவரும் பார்ட்னர்ஷிப் முறையில் 100 ரன்களைக் கடந்தனர். அத்துடன் நில்லாமல் இந்த இணை கடைசிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தது.
இதன்மூலம் அயர்லாந்து அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தது. இதில் அபாரமாக விளையாடிய கர்டிஸ் காம்பெர் 72 ரன்களையும், ஜார்ஜ் டக்ரெல் 39 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.
இப்போட்டியில் 177 ரன்கள் என்ற இலக்கை துரத்தி வெற்றிபெற்றதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணி சேஸ் செய்த அதிகபட்ச இலக்காகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now